கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Tag Archives: friends

நண்பேன்டா – 2 …

நண்பேன்டா சீரிஸ்ல ரொம்ப நாளா  பதியணும்னு நெனச்சேன், இப்போ தான் பதிய முடிந்தது…. (நண்பேன்டா – 1 படிக்க)

சென்னையில் 6 ஆம் வகுப்பில் நான் புதிய மாணவன் என்பதால், எனக்கு நண்பர்களே கிடையாது அல்லது யாரிடமும் பேச மாட்டேன். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், இருந்தும் வகுப்பறைகள் மட்டமாக இருக்காது. வகுப்பறைக்குள் சாப்பாட்டுக் கூடைகளை வைக்கும் இடம் எங்களுக்கு எதிரில் ப்ளாக் போர்டுக்குப் பக்கத்தில் இருக்கும். சிமன்ட்டினால் சுவற்றில் செய்யப்பட்ட ஒரு அலமாரி அது. 11.00 மணி இன்டர்வல் அல்லது பிரேக் விடும் போது மாணவச் செல்வங்கள் அனைவரும் எழுந்து போய் எங்கள் முன்னால் சிமன்ட்டில் செய்த அலமாரியில் வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிப்போம். தண்ணீர் குடித்து விட்டு சிலர் எதாவது பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். சிலர் தண்ணீர் இறக்கி விட்டு வருவார்கள் (urinal). 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வைத்திருக்கும் பணக்காரர்கள் காண்டீனில் வாங்கித் தின்பார்கள் பெரும்பாலும் சமோசா தான்.

நான் யாரிடமும் பேசாத காரணத்தால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் பெரும்பாலும் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்வேன். யாரிடமும் தண்ணீர் கேட்கவும் மாட்டேன். யாரும் என்னிடம் கேட்கவும் மாட்டார்கள்.

அந்த காலத்தில் (1994), எவர் சில்வரினால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் பிரபலம். அனைத்து பள்ளிச்சிறுவர்களும் அதை தான் பயன்படுத்துவார்கள். நானும் அதற்க்கு விதிவிலக்கு இல்லாததால் அதை தான் பயன்படுத்தினேன்.

நல்லதொரு செப்டம்பர் மாதத்தில் (என்று நினைக்கிறேன்) தண்ணீர் பாட்டில் அடியில் ஓட்டையானதால், கொண்டு போன தண்ணீர் அனைத்தும் வீணாக ஆனது. இது தெரியாமல் 11.00 மணி பிரேக்கில் நான் தண்ணீர் குடிக்க சென்ற போது, காலியாக இருந்த பாட்டிலை பார்த்து அதிர்ச்சி ஆனேன். அந்த வயசுல இந்த மாதிரி மாட்டருக்கு தானங்க அதிர்ச்சி ஆவோம். பக்கத்தில் நின்றிருந்தவனிடம் தண்ணீர் கேட்க்க, அவன் கர்நாடகா, கேரளா மாதிரி “எனக்கே கொஞ்சம் தான்டா இருக்கு” னு சொல்ல, அவனுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பையன் “இந்தாடா குடி” என்று அவனுடைய தண்ணீர் பாட்டிலை நீட்டினான். நானும் வாங்கிக் குடித்து விட்டு பெஞ்சுக்கு போய் உட்க்கார்ந்தேன். குடிக்க தண்ணி குடுத்த பையன் கிட்ட கூட பேச மாட்டேன்க நானு (சைக்கோப் பைய, சைக்கோப் பைய…)

அவ்வளவு தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம். அது தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகமாக இருக்கும் என்பது கூட எனக்கு புரியவில்லை அப்போது. ஒரு நாள் அவனுடைய அண்ணன் (அவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தார்), தங்கள் தந்தை இறந்து விட்டார் என்று சொல்லி அவனை எங்கள் வகுப்பில் கொண்டு வந்து விட்டார். நீண்ட விடுப்பில் இருந்து அப்போது தான் மறுபடியும் வகுப்புகளுக்கு திரும்பினான். அந்த சமயத்தில் கூட அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை எனக்கு. பின்பு அரையாண்டுத் தேர்வுகள் வந்தது. அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும் சமயங்களில் மழைக் காலமாக இருக்கும். மழை பெய்தால், பள்ளி மைதானத்தில் அங்கங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால் செம்மண் கொண்டு வந்து தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் இட்டு நிரப்புவார்கள்.

ஏதோ ஒரு பாடப் பரீட்சை முடிந்து முதல் மாடிப் படிக்கட்டுகளில் நான் கீழிறங்கி வரும் போது, அந்தப் பையனும் என்னுடன் சேர்ந்து கொண்டான். கீழே இறங்கி வரும் போது, அவன் என்னிடம் “டே  கிரவுண்டுல இருக்கற மண்ணெல்லாம் எங்க இருந்து கொண்டு வந்திருக்காங்கன்னு தெரியுமா” னு கேட்டான். நான் “தெரியாது டா” னு சொன்னேன். அவன் “இந்த மண்ணெல்லாம் நம்ம ப்ரின்சிப்பால் மண்டேல இருந்து கொண்டு வந்தது டா” னு சொல்ல நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த வயதில் இதெல்லாம் மிகப் பெரிய ஜோக்காச்சே. அது தான் எனக்கும் அவனுக்குமான உண்மையான அறிமுகம். ஒவ்வொரு  பரீட்சை முடிந்தவுடன் என்னுடனே என் வீடு வரை வருவான், “வீட்டுக்குள்ள வாடா”ன்னு  கூட அழைக்க மாட்டேன். நான் வீட்டிற்குள் சென்ற பின், அவன் வீட்டிற்கு கிளம்பிச் செல்வான். அந்த சமயங்களில் என்னுடைய வீட்டிற்குள் அவனை அழைத்துச் செல்வதற்கு கூட பயமாக இருக்கும், ஏன் பயந்தேன் (படிக்க கொசுறு ‘2’).

அவன் வீடு எங்கள் பள்ளிக்கு பின்புறம் இருந்தது. என்னை வீட்டில் விட்டு விட்டு, எங்கள் பள்ளியை தாண்டி அவன் வீட்டிற்க்கு செல்வான் (நடந்து தான்).

இவ்வாறாக எங்கள் நட்பு, பள்ளியில் கண்ணா மூச்சி, கிரிகெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, பின்பு எல்லா நண்பர்களும் செய்யும் அனைத்து தப்பையும் தவறாமல் செய்து வளர்ந்தது. சென்னையில் எனக்கான இன்னொரு அற்ப்புதமான அறிமுகம் இவன் தான். இன்றும் என்னுடைய உற்ற நண்பனாக அடிக்கடி சண்டைகளுடனும், நிறைய பேச்சுகளுடனும் எங்கள் நட்பு தொடர்கிறது. காலஓட்டம், காலப்போக்கு, வைத்துப்போக்கு அனைத்திலும் எங்கள் நட்பு தொடரும் என்று நினைக்கிறேன்.

கொசுறு::

1. அவன் பெயர் சீனிவாசன். MBA (Tourism and Hotel Management) முடித்து விட்டு, தனக்கான சரியான களம் எது என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கின்றான் …

2. ஏன் பயந்தேன் என்பதை ஆராய வேண்டாம்… free yah உடுங்க …

3. இது சீனிவாசனுக்கு … இந்தப் பதிவை படித்து விட்டு, எனக்கு போன் செய்து நெஞ்சை நக்கினால், ____________________ (fill in the blanks with பேடு words) …

Advertisements

நண்பேன்டா – 1…

1994 இல் நான் பழனியில் என் தாத்தா வீட்டில் இருந்து, தாத்தா, சித்தி, சித்தப்பா, அத்தை, ஆச்சி, சித்தி பசங்க, அத்த பசங்க அனைவரையும் பிரிய முடியாமல் சோகத்துடன் வந்தேன் சென்னைக்கு. ஆறாம் வகுப்பில் இருந்து என் படிப்பை ஆரம்பிக்க.
ஆனால் பழனியில் இருக்கும் பள்ளிகளைப்போல உடனே சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம், நுழைவுத் தேர்வு வைத்து அதில் பாஸ் செய்பவர்களைத்தான் சேர்ப்பார்கள். சென்னை பெரம்பூரில் சி.டி.டி.இ என்னும் பள்ளி மிகவும் பிரபலமாக இருந்தது. செயின்ட்.மேரிஸ் குரூப்பின் ஒரு பள்ளி தான் அது. அது என்னவோ தெரியல செயின்ட்.மேரிஸ்னு பேர் வச்சாலே அந்த ஸ்கூல் ரொம்ப நல்ல ஸ்கூல் என்னும் நினைப்பு மக்களுக்கு.இது இன்றும் தொடர்கிறது.

சரி சி.டி.டி.இ ஸ்கூல்ல entrance எக்ஃஸாம் வச்சு தான் சேர்த்துக்கொள்வார்களாம். அதற்க்காக நல்ல preparation எதுவும் இல்ல. சும்மா போய் எழுதலானு ஐடீயா வச்சிருந்தேன். ஏன்னா சென்னைல இருக்கிறதே எனக்கு பிடிக்கவில்லை. ஆனா அதுக்குள்ள வீட்ல ஒரு ஆங்கிலோ இண்டியன் டீச்சர் கிட்ட இருந்து புக்கெல்லாம் வாங்கி கொடுத்தாங்க, இலவசமா அவங்களோட அட்வைசும் வந்துச்சு. நுழைவுத் தேர்வு நாளும் வந்துது.

அந்த ஸ்கூலுக்கு காலைல போய் எக்ஃஸாம் ரூம்ல ஒட்க்கார்ந்தேன். ஒரு பெஞ்சுக்கு  ரெண்டு பெரு உட்க்காரனும். என் பக்கத்துல உட்க்கார்ந்த பையனுக்கோ ஒன்னும் தெரியல போல, அடிக்கடி என் ஆன்சர் பேப்பர பார்ப்பான்.

நானும் சரி அவனுக்கு எதுவும் தெரியல போலனு நெனைச்சு, பார்த்து எழுதுரியானு ஜாடைல கேட்டேன்.அவனும் பார்த்து எழுதுனான்.

நானும் கடமை உணர்ச்சியோட அவனுக்கு என்னோட ஆன்சர் பேப்பர காட்டினேன். பரீட்சையும் முடிஞ்சிது. ரெண்டு பெரும் கெளம்பி போய்ட்டோம்.

கொஞ்ச நாள் கழிச்சு ரிசல்ட்டும் வந்தது. நான் பாஸ் ஆகிட்டேன். ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சாச்சு. அந்த நாட்கள்ள டிட்பிட் அப்படிங்கர மிட்டாய் விப்பாங்க. எனக்கு டிட்பிட் ரொம்ப பிடிக்கும். அந்த மிட்டாய் பான் வாசனயோட ஒரு மாதிரி நல்லா இருக்கும் (நிஜமா எனக்கு அது பான் வாசனனுன்னு அந்த வயசுல தெரியாது, ஆனா நல்ல வாசனயா இருக்கும்னு தெரியும்) அந்த டிட்பிட் போதைல, எங்க வீட்டு பக்கத்தில இருந்த டீக்கடைல டிட்பிட் வாங்கப்போனேன்.

அந்த டீக்கடை எங்க தெருவுக்குப் பக்கத்துத் தெருவோட ஆரம்பத்துல இருக்கும். நான் கடைகிட்ட போனப்போ, என் பக்கத்துல உட்கார்ந்து entrance எக்ஸாம் எழுதுன அதே பையன் டீக்கடை பக்கம் நடந்து வந்தான்.

எனக்கு ஒரே ஆச்சரியம். அவன் கிட்ட வந்த உடனே, “டே நீ இங்க தான் இருக்கியா??”- நான் கேட்டேன். அவனும் “ஆமா இங்க தான் என் வீடுனு சொன்னான்”, அந்தத் தெருவக்காட்டி.
அவன அங்க டீக்கடைல பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா மெட்ராஸ்ல எனக்கு கிடைத்த முதல் அறிமுகம், அதுவும் என் வயதுப்பைய்யனுடன்.

“நீ ஏன் ஸ்கூல்ல சேரல்ல??” னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் “நான் entrance டெஸ்ட்ல ஃபைல் ஆகிட்டேன்”. வேற ஒன்னும் பேசல ரெண்டு பேரும் போய்ட்டோம்.
அதன் பிறகு நானும் அவனும் ‘பல’ நாள் கழித்து மீண்டும் சந்திக்க நேர்ந்து, க்ரிக்கெட் விளையாட ஆரம்பித்து, பின் எல்லா தெள்ளவாரித்தனமும் பண்ணி, இப்பொது என்னோட ஜிகிரி தோஸ்த்.
முன்ன பின்ன யாருன்னே தெரியாத ஒரு பைய்யன் அதுவும் என் பக்கத்தில் உட்க்கார்ந்து பரீட்சை எழுதின பைய்யன் எனக்குப் பக்கத்துத் தெருவுல தான் இருந்திருக்கான். பின்னாட்களில் அவனே என்னோட க்ளோஸ் பிரண்ட் ஆனது இப்போ நெனைச்சாலும் எனக்கு ஆச்சர்யமா தான் இருக்கு.

ஆனா ஒரு விஷயம் ரொம்ப வருஷம் கழித்து தான் எனக்கு புரிந்தது, என்ன பார்த்து டெஸ்ட்ல காப்பி அடிச்சு அவன் ஃபைல் ஆகிட்டான்னு. 🙂

தலைவருக்கு இப்போ கல்யாணம் ஆகப்போகுது. முன்ன மாதிரி ஒன்னா சேர்ந்து ஊர் சுத்தறது இல்ல, ஏன் கொஞ்ச நெரம் பேசிக்கக்
கூட முடியறது இல்ல. வேல, வெட்டினு ரொம்பவே பிசி ஆகிட்டோம்.

அவன் கூட நானும் என் மற்ற நண்பர்களும் சேர்ந்து அடிச்ச கூத்த ஒரு தனி தொடர்கதையா தான் எழுதனும். அதுவும் தலைவர் அடிச்ச கூத்த மட்டுமே ஒரு நெடுந்தொடரா தான் எழுதனும்.
சென்னைல எனக்கு கெடைச்ச முதல் நண்பன். எனக்கு ரொம்ப நல்ல நண்பனா இருந்தவன், இன்னமும் இருப்பான் என்னும் நம்பிக்கையும் உள்ளது.

கொசுரு::

அந்த நண்பனின் பெயர், விஜய குமார். எங்க எல்லாருக்கும் விஜி, விஜய், etc …. 🙂