கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Tag Archives: கிரிக்கெட்

கிரிக்கெட் …

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஆரம்பித்து கிட்டத் தட்ட 10 நாட்கள் ஆகி விட்டது. “டே நாட் அவுட் டா அது”, “நோ பால் டா”, “எங்க ஸ்கோர் 20 டா”, “யே அது சிக்ஸ்ஸு” என்று அனைவரும் தெருக்களிலும், கிரவுண்டுகளிலும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதையும், விளையாடிக் கொண்டு இருப்பதையும் நாம் எப்போதும் காணலாம். ஆனால் அடுத்த இரண்டு மாதம் ஹனி மூன் பீரியட் மாதிரி. கிரிக்கெட் விளையாட்டு பீக்கில் இருக்கும். இதைப் போலவே தான் 15 வருடத்திற்கு முன் நாங்களும் ஆரம்பித்தோம். 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடக்க விழாவின் போது ‘இவன் தான் பேப்பர்ல அடிக்கடி வர்ற, நாடே கொண்டாடும் சச்சினா’, என்று சுருள் பரட்டை முடியுடன் இருந்த ஒருவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. கிரிக்கெட் என்றால் சச்சின் தான் எங்களுக்கு அந்த வயதில். இந்த வயதிலும் அப்படித் தான்.

அதன் பிறகு கிரிக்கெட் கடவுள் சச்சின் சம்பந்தப்பட்டது எதுவாக இருந்தாலும் பிடிக்க ஆரம்பித்திருந்தது. இதனாலே MRF Tyres, Pepsi, Boost என்று அந்த லிஸ்ட் செல்லும். சச்சின் விளம்பரப்படுத்திய பொருட்கள் நல்லா இருக்கோ இல்லையோ ஆனா அந்தப் பொருளை எல்லாம் நாங்க பயன்படுத்தறதுல ஒரு பெருமை. சச்சின் சரியாக ஆடவில்லை என்றால் வருத்தப்பட்டு டி.வி யை ஆப் செய்யும் அளவுக்கு சச்சின் வெறியர்களாக இருந்தோம்.

இந்தியா ஜெயிக்குதோ தோக்குதோ, சச்சின் நல்லா ஆடுனா போதும் என்று நினைக்கும் அளவிற்கு தேச பக்தர்கள் நிரம்பிய கூட்டம் எங்களுடையது. 2011 உலகக் கோப்பை தான் சச்சின் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். சச்சினுக்கு மட்டும் வயசு ரிவர்சில் போகக் கூடாதா என்று தோன்றுகிறது. கால ஓட்டத்தில் நிறைய பேர் சச்சினைப் பார்த்து கிரிக்கெட் பழகி இந்தக் காலத்து சிறுவர்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த உலகக் கோப்பையில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக நான் கருதும் அணிகள் இந்தியா, தென் ஆப்ரிக்கா, சிறிலங்கா, பாகிஸ்தான் ஆகியவை. ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவில் சில வீரர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சிலர் சொல்லிவிடுவார்கள் இது தான் நான் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை என்று. பலர் உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்த பின் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதைப் போலவே இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்த பின் காணாமல் போகப் போகும் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் பீல்டில் ரசித்த பலரை இனிமேல் வர்ணனையாளராகவோ, கோச்சாகவோ, அம்பயராகவோ, match analyst ஆகவோ பார்க்கப் போகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

1996 உலகக் கோப்பை – நானெல்லாம் கிரிக்கெட் விளையாடக் காரணமாக இருந்தது. முதன் முறையாக அப்போது முழு வீச்சில் மட்டையை தூக்க ஆரம்பித்து, இந்தத் தள்ளாத வயதிலும் விளையாடிக் கொண்டு இருக்கிறேன் (ஆனால் அவ்வப்போது). 1999 உலகக் கோப்பை – நத்திங் ஸ்பெஷல், கிரிக்கெட்டுடன் ஒன்றிப் போய் இருந்த காலம். 2003 உலகக் கோப்பை – நான் B.E படித்த கால கட்டத்தில் நடந்த ஒரே ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. அந்த சமயத்தில் ‘இந்த வேர்ல்ட் கப் தான் நான் ‘படிக்கும்’ போது பாக்குற கடைசி வேர்ல்ட் கப், அடுத்த வேர்ல்ட் கப் பாக்கும் போது வேலைக்கு போயிட்டு இருப்பேன்’ என்று நினைத்து மொக்க்க்க்கை வாங்கினேன். ஏன் என்றால் அடுத்த உலகக் கோப்பை நடந்த 2007 ஆம் வருஷமும் நடிகர் முரளி, தாமு போன்று ஸ்டூடண்ட்டாகவே இருந்தேன். ஒரு வழியாக 2011 உலகக் கோப்பை தான் நான் வேலைக்கு போய்க் கொண்டே பார்க்கும் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்னும் பெருமையை அடைந்ததுள்ளது.

கொசுறு::

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான் நான் bachelor என்னும் designation ல் இருந்து பார்க்கும் கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்று (மறுபடியும்) நினைத்துக் (!!!) கொண்டிருக்கிறேன் ??? 🙂

Advertisements