கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

காய்ச்சல் …

கண்ணனுக்கு உடம்பு சரியில்லாமல் போய் இன்றோடு மூன்றாவது நாள். தொண்டை ஒரு மாதிரி இருந்தது இரண்டு நாட்களுக்கு முன். தற்போது மூக்கு ஒழுகல், வறட்டு இருமல், தலைவலி கூடவே காய்ச்சல் வேறு. நேற்று மதியத்தில் இருந்து அவனைப் போட்டு வாட்டி விட்டது. சென்னைக்கு பொறியியல் படிக்க வந்த மூன்று வருடத்தில் இப்போது தான் முதல் முறையாக அவனுக்கு இவ்வளவு மோசமாக உடம்பு சரி இல்லாமல் போய் இருக்கிறது. ‘எந்த நோய் வேணும்னாலும் வரலாம், ஆனா யாருக்கும் காய்ச்சல் மட்டும் வரவே கூடாது டா சாமி’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் பொறியியல் தெரிந்த அளவு அவனுக்கு மருத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பு  இல்லை. இந்தக் காய்ச்சல் வரக் காரணம் த்ரோட் இன்பக்சன் தான் என்பது அவனுக்கு தெரியாது.

காய்ச்சல் இருந்தால் சுடு தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியும், ஆனால் சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்க ஆளும் இல்லை, அடுப்பும் இல்லை. அவனுடன் தங்கி இருக்கும் கிருபா,  “என்னடா எப்படி இருக்கு உடம்பு, இன்னைக்காவது காலேஜ் வருவியா” என்று கேட்டான் அசைன்மன்ட் நோட்டை பேக்கில் வைத்துக் கொண்டே. பதில் இல்லை. “ஊருக்கு போகலான்ல” என்று கிருபா கேட்டதற்கு, மறுபடியும் பதிலே இல்லாததால், “டே உன்னத்தான்… ஊருக்கு போகலான்ல” எனத் திரும்பக் கேட்டான். மண்டையை ஆட்டினான் கண்ணன்.

கிருபாவும் காலேஜுக்குப் போய் விட்டான். ரூமில் ஆள் இல்லாமல் தனியாக இருப்பது எரிச்சலாக இருந்தது. ஊருக்குப் போகலாம் என்றால் இந்த சமயம் பார்த்து கடந்த மூன்று நாட்களாக அவன் அம்மாவும் ஊரில் இல்லை. அக்காள் வீட்டிற்கு சென்றவள் இன்றிரவு தான் வருவாள் என்பதை மூன்று நாட்களுக்கு முன் பேசிய போது சொன்னாள்.

மேலே சீலிங்கில் மிகவும் மெதுவாக ஓடிக் கொண்டிருந்த பேனை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல வலது புறம் சாய்த்துப் படுத்தான். கண் விழித்துப் பார்த்த போது தண்ணீர் வற்றிப் போன ஒரு ஓடைக்கு ஓரமாகப் படுத்துக் கிடந்தான். எந்த இடம் என்று சுற்றிப் பார்த்தான். சிறிது தூரத்தில் பனை மரங்கள் அசைவில்லாமல் அமைதியாக நின்றிருந்ததைப் பார்த்தவுடன்,  ‘ஓ, குதிர வாய்க்காலா’ என்று தனக்குத் தானே சொல்லிகொண்டான். எழுந்து அமர்ந்த கொஞ்ச நேரத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்ததை உணர்ந்தான். சுற்றி யாரும் இல்லை. உடல் சூடாகி வியர்க்க ஆரம்பித்தது. கழுத்து வலித்தது.

“அஹ்” என்ற முனகலுடன், கண்ணைத் திறந்து பார்த்தான். இன்னும் ரூமில் தான் படுத்து இருந்தான். ‘அடச்சே, கனவா’ என்று சலித்துக் கொண்டு பக்கத்தில் வைத்திருந்த மொபைலில் மணி பார்த்தான். பதினோரு மணி ஆகி விட்டிருந்தது. அந்த பத்துக்குப் பத்து ரூமில் புழுங்க வாடை அடிக்க ஆரம்பித்ததை உணர முடிந்தது கண்ணனால். மெதுவாக எழுந்து பிரட் பாக்கட்டைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தான்.நாலு ஸ்லைஸ் சாப்பிட்டு, கொஞ்சம் போல குடத்தில் இருந்த தண்ணீரைக் குடித்தான்.

மறுபடி மெல்லிய குளிர் ஆரம்பித்தது. போர்வைக்குள் புகுந்து கண்ணை மூடினான். எழுந்து பார்த்த போது மணி மூன்று ஆகி விட்டிருந்தது. ஊருக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டு அம்மாவுக்குப் போன் செய்தான். பத்தாவது முறையாக, “நாட் ரீச்சபிள்” என்று ரிக்கார்டட் வாய்ஸ் சொன்னது. உடம்பு வலியுடன் மெதுவாக  பஸ் ஸ்டாப் போய் சென்ட்ரல் செல்லும் பஸ் ஏறினான்.

ஒரு ஆட்டோ பிடித்து அரக்கோணம் பஸ் ஸ்டாண்ட் சென்ற போது மணி ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. பக்கத்தில் யாரோ ஒருவர்  “கதிரு, நான் கல்யாண மண்டபத்துக்கு ஒரு ஏழரை மணிக்கு வந்துருவேன்” என்று செல் போனில் கத்திக் கொண்டு சென்றதை எரிச்சலுடன் பார்த்தான். எல்லா பஸ்களிலும் கூட்டம். நிற்க்கக் கூட இடம் கம்மியாக இருந்தது. நிறைய பட்டுப் புடவைகள், வெள்ள சட்ட வெள்ள வேட்டிகள் நின்று கொண்டிருந்தனர். கண்ணன் வேலூர் செல்லும் பஸ்ஸில் சோளிங்கர் செல்வதற்கு ஏறினான்.

பஸ்சிற்குள் ஒரே தள்ளு முள்ளு. ‘உட்கார்ந்தால் தேவலாம்டா’ என்று கண்ணன் உடம்பு சொன்னது. கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவனை நெருக்கித் தள்ளி விட்டு அவன் முன்னால் வந்து நின்றாள் ஒரு பெண். தன்னுடைய குழந்தையை சீட்டில் உட்கார்ந்து இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு கண்ணனுக்குப் பக்கவாட்டில் நின்றாள்.

கூட்டம் மேலும் அதிகமாகி சுற்றி நின்ற அனைவரும் இவனை நெருக்க ஆரம்பித்தனர். வறட்டு இருமலும் அவ்வப்போது வந்து போனது. உடல் சூடு அதிகமாக ஆரம்பித்தது. கண்ணை மூடியவாறு நின்று கொண்டிருந்தவனை திடீரென்று அந்தப் பெண் கூப்பிட்டாள், “தம்பி,  தம்பி”, கண்ணை விழித்து “உம்” என்றான். “உடம்பு சரி இல்லையா” என்று கேட்டாள். “ஆமாங்க” என்று முனகினான். அவன் தலையையும், கழுத்தையும் தொட்டுப் பார்த்து “அச்சச்சோ, ஜுரம் அடிக்குது… தனியாவா வந்திருக்க” என்றாள். “உம்” என்றான் கண்ணன். அவள் சட்டென்று, பக்கவாட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் “ஏம்மா , இந்தப் பையனுக்கு உடம்பு சரியில்ல ஜுரம் அடிக்குது, உக்கார எடம் கொடேன்” என்று சொல்லி இடம் வாங்கிக் கொடுத்தாள். “உக்காந்துக்கோப்பா… ஏன் தனியா வர்ற, ஒடம்பு சரியில்லாதப்ப” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோது போது கண்ணீர் கண்ணன் கண்ணை மறைக்க ஆரம்பித்து இரண்டொரு நொடிகளுக்கு மேல் ஆகி இருந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: