கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

மந்திரப் புன்னகை …

புதன் கிழமை, காலை 6 மணி. “பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால், பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்”, என்னும் டிஷ்யூம் படத்தின் பாடல் அலாரமாக ஒளித்துக் கொண்டிருந்தது சீனுவின் மொபைலில். “டே மூனாவது தடவயா அலாரம் அடிக்குது டா” என்று அவன் தூங்கிக் கொண்டிருக்கும் ரூமுக்கு வந்து சொன்னாள், ஐய்ந்தரை மணிக்கே எழுந்து விடும் பழக்கம் கொண்ட அவன் அம்மா.

அன்று சீனுவுக்கு காம்ப்-ஆஃப். ஒரு வழியாக 6.20 க்கு எழுந்தான். சீனுவிடம் ஒரு பழக்கம், லீவு நாட்களிலும் ஆறரை மணிக்குள் எழுந்து விடுவான். எழுந்து பல் விளக்கி, சுக்கு காபி குடித்து, ரெண்டுக்குப் போய் விட்டு பின் குளித்து விட்டு காலை டிபன் சாப்பிட்டு முடித்தவுடன் மணி எட்டேமுக்கால் ஆகி இருக்கும். தினத்தந்தி படித்து முடித்து விட்டு, டீ.வி பார்க்க ஆரம்பித்தான். சீனுவின் அப்பாவுக்கு தோசை ஊற்றி விட்டு அவன் அம்மாவும் அவன் அமர்ந்திருந்த சோபாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து தினத்தந்தி படிக்க ஆரம்பித்தாள். ஏதோ ஒரு விளம்பரத்தைப் பார்த்து விட்டு சட்டென சீனுவிடம் திரும்பி, “டே  மேட்ரிமோனியல்ல இருந்து போன் பண்ணாங்க டா, நெறய வரன் வந்திருக்காம் உனக்கு ஏத்த மாதிரி. உன் போட்டோவ அப்லோட் பண்ண சொல்றாங்க. நீ இன்னும் ப்ரீ யூசரா தான் இருக்கியாம். அதனால பணம் கட்ட சொல்றாங்க, கொஞ்சம் என்னனு பாரேன்” என்று சொன்னாள்.

டீ.வியை ஆப் செய்துவிட்டு எழுந்து போய் கம்ப்யூட்டரையும், மோடத்தையும் ஆன் செய்தான். மேட்ரிமோனியல் வெப் சைட்டைப் பார்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் கழித்து அலுத்துக் கொண்டான். “அம்மா இவங்க சர்வீஸ் சரி இல்லமா, எனக்கு எந்த பொண்ணையும் பிடிக்கல. இந்த லட்சணத்துல பணம் கட்டணுமாம் பணம்” என்றான். இப்போது சீனுவைப் பற்றி சொல்ல வேண்டும். வயது 28 ஆகிறது. ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கிறான். பார்க்க ஆள் ஒன்றும் சினிமா ஹீரோ மாதிரி இருக்க மாட்டான். ஆனால் நம்மில் ஒருவனைப் போல் இருப்பான். கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்து விட்டு, “அம்மா நான் ஒரு செக்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணனும், போய்ட்டு வர்ரேன்” என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானான். வாசல் வரை வந்து அவன் அம்மா வழி அனுப்ப பைக்கில் புறப்பட்டான்.

ஐ.சி.எப் வழியாக அண்ணா நகரில் உள்ள அந்த பிரைவேட் பேங்கை அவன் அடைந்த போது மணி பத்தரை ஆகியிருந்தது. அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சல்லானை ஒரு வழியாகக் கண்டுபிடித்து, அதை நிரப்பி விட்டு அங்கு இருந்த செக்யூரிட்டியிடம், “இத எங்க கொடுக்கனும்” என்று கேட்டான். அவர் “அங்க போப்பா” என்று அவனுக்கு எதிர்ப்புறம் போகச் சொன்னார். அந்த இடத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இதற்க்கு முன்பு பல முறை இந்த பேங்குக்கு வந்திருக்கிறான். அந்தப் பெண்ணையும் பார்த்திருக்கிறான், ஆனால் அவளிடம் சென்று செக் கொடுக்கும் வேலை இது வரை இருந்ததில்லை. இப்போது தான் முதல் முறையாக அவளிடம் போகிறான்.

அந்தப் பெண் அவளுக்கு முன் அமர்ந்திருந்த இரண்டு வயதானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். சீனு அருகில் சென்று செக்குடன் நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வயதானவர்கள் இருவரும் கிளம்ப எத்தனிக்க, அவள் சீனுவிடம் செக்கை கொடுக்கச் சொன்னாள், சைகையிலே. சீட்டு காலியானவுடன் அந்தப் பெண்ணுக்கு எதிரில் அமர்ந்தான். அவள் செக்கைப் பார்த்து கம்ப்யூட்டரில் ஏதோ என்ட்ரி செய்து கொண்டிருக்கும் போது சீனு கேட்டான், “ஏங்க, நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா?”. சீனு சொன்னதை சரியாகக் கேட்காத தொனியில், அவள் “வாட்?” என்றவாறே அவனைப் பார்த்தாள். சீனு அவளைப் பார்த்து, ஒரு புன்னகையோடே, “நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா, உங்க ப்ரொபைல் அதுல இருக்கா?”, இந்த முறை தெளிவாகக் கேட்டான். அவள் சற்றே அதிர்ச்சியுடன் முகத்தைப் பொறுமையாகக் கீழிறக்கினாள். இரண்டொரு நொடிகள் கழித்து அவன் கேட்டது புரிந்தது போல் கொஞ்சம் வெட்கத்துடனும், மைக்ரோஸ்கோபிக் புன்னகையுடனும் சீனுவை நிமிர்ந்து பார்த்தாள்.

Advertisements

One response to “மந்திரப் புன்னகை …

  1. srinivasan January 22, 2011 at 13:46

    சூப்பர் ! ரசனைமிகு பதிவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: