கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Monthly Archives: January 2011

மந்திரப் புன்னகை …

புதன் கிழமை, காலை 6 மணி. “பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால், பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்”, என்னும் டிஷ்யூம் படத்தின் பாடல் அலாரமாக ஒளித்துக் கொண்டிருந்தது சீனுவின் மொபைலில். “டே மூனாவது தடவயா அலாரம் அடிக்குது டா” என்று அவன் தூங்கிக் கொண்டிருக்கும் ரூமுக்கு வந்து சொன்னாள், ஐய்ந்தரை மணிக்கே எழுந்து விடும் பழக்கம் கொண்ட அவன் அம்மா.

அன்று சீனுவுக்கு காம்ப்-ஆஃப். ஒரு வழியாக 6.20 க்கு எழுந்தான். சீனுவிடம் ஒரு பழக்கம், லீவு நாட்களிலும் ஆறரை மணிக்குள் எழுந்து விடுவான். எழுந்து பல் விளக்கி, சுக்கு காபி குடித்து, ரெண்டுக்குப் போய் விட்டு பின் குளித்து விட்டு காலை டிபன் சாப்பிட்டு முடித்தவுடன் மணி எட்டேமுக்கால் ஆகி இருக்கும். தினத்தந்தி படித்து முடித்து விட்டு, டீ.வி பார்க்க ஆரம்பித்தான். சீனுவின் அப்பாவுக்கு தோசை ஊற்றி விட்டு அவன் அம்மாவும் அவன் அமர்ந்திருந்த சோபாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து தினத்தந்தி படிக்க ஆரம்பித்தாள். ஏதோ ஒரு விளம்பரத்தைப் பார்த்து விட்டு சட்டென சீனுவிடம் திரும்பி, “டே  மேட்ரிமோனியல்ல இருந்து போன் பண்ணாங்க டா, நெறய வரன் வந்திருக்காம் உனக்கு ஏத்த மாதிரி. உன் போட்டோவ அப்லோட் பண்ண சொல்றாங்க. நீ இன்னும் ப்ரீ யூசரா தான் இருக்கியாம். அதனால பணம் கட்ட சொல்றாங்க, கொஞ்சம் என்னனு பாரேன்” என்று சொன்னாள்.

டீ.வியை ஆப் செய்துவிட்டு எழுந்து போய் கம்ப்யூட்டரையும், மோடத்தையும் ஆன் செய்தான். மேட்ரிமோனியல் வெப் சைட்டைப் பார்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் கழித்து அலுத்துக் கொண்டான். “அம்மா இவங்க சர்வீஸ் சரி இல்லமா, எனக்கு எந்த பொண்ணையும் பிடிக்கல. இந்த லட்சணத்துல பணம் கட்டணுமாம் பணம்” என்றான். இப்போது சீனுவைப் பற்றி சொல்ல வேண்டும். வயது 28 ஆகிறது. ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கிறான். பார்க்க ஆள் ஒன்றும் சினிமா ஹீரோ மாதிரி இருக்க மாட்டான். ஆனால் நம்மில் ஒருவனைப் போல் இருப்பான். கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்து விட்டு, “அம்மா நான் ஒரு செக்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணனும், போய்ட்டு வர்ரேன்” என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானான். வாசல் வரை வந்து அவன் அம்மா வழி அனுப்ப பைக்கில் புறப்பட்டான்.

ஐ.சி.எப் வழியாக அண்ணா நகரில் உள்ள அந்த பிரைவேட் பேங்கை அவன் அடைந்த போது மணி பத்தரை ஆகியிருந்தது. அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சல்லானை ஒரு வழியாகக் கண்டுபிடித்து, அதை நிரப்பி விட்டு அங்கு இருந்த செக்யூரிட்டியிடம், “இத எங்க கொடுக்கனும்” என்று கேட்டான். அவர் “அங்க போப்பா” என்று அவனுக்கு எதிர்ப்புறம் போகச் சொன்னார். அந்த இடத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இதற்க்கு முன்பு பல முறை இந்த பேங்குக்கு வந்திருக்கிறான். அந்தப் பெண்ணையும் பார்த்திருக்கிறான், ஆனால் அவளிடம் சென்று செக் கொடுக்கும் வேலை இது வரை இருந்ததில்லை. இப்போது தான் முதல் முறையாக அவளிடம் போகிறான்.

அந்தப் பெண் அவளுக்கு முன் அமர்ந்திருந்த இரண்டு வயதானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். சீனு அருகில் சென்று செக்குடன் நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வயதானவர்கள் இருவரும் கிளம்ப எத்தனிக்க, அவள் சீனுவிடம் செக்கை கொடுக்கச் சொன்னாள், சைகையிலே. சீட்டு காலியானவுடன் அந்தப் பெண்ணுக்கு எதிரில் அமர்ந்தான். அவள் செக்கைப் பார்த்து கம்ப்யூட்டரில் ஏதோ என்ட்ரி செய்து கொண்டிருக்கும் போது சீனு கேட்டான், “ஏங்க, நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா?”. சீனு சொன்னதை சரியாகக் கேட்காத தொனியில், அவள் “வாட்?” என்றவாறே அவனைப் பார்த்தாள். சீனு அவளைப் பார்த்து, ஒரு புன்னகையோடே, “நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா, உங்க ப்ரொபைல் அதுல இருக்கா?”, இந்த முறை தெளிவாகக் கேட்டான். அவள் சற்றே அதிர்ச்சியுடன் முகத்தைப் பொறுமையாகக் கீழிறக்கினாள். இரண்டொரு நொடிகள் கழித்து அவன் கேட்டது புரிந்தது போல் கொஞ்சம் வெட்கத்துடனும், மைக்ரோஸ்கோபிக் புன்னகையுடனும் சீனுவை நிமிர்ந்து பார்த்தாள்.

Advertisements

ஆண் பாவம்

பாண்டியராஜனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம். வெளியான ஆண்டு: 1985. முதல் படம் ‘கன்னி ராசி’ (இயக்கம் மட்டும்). ஆண் பாவத்தில் இயக்கம், நடிப்பு என இரண்டையும் திறமையாக கையாண்டிருப்பார்.

ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு அண்ணன் தம்பிகள், அவர்களின் வாழ்கை நிகழ்வுகள். இது தான் ஆண் பாவம். v.k. ராமசாமி – ஜனகராஜ், பாண்டியன் – பாண்டியராஜன், இவர்கள் தான் முறையே அண்ணன் தம்பிகள். வழக்கம் போல் காதலும் உண்டு. படத்தில் மொத்தம் நாலே பாடல்கள் தான். நான்கும் நல்ல பாடல்கள் (அதில் ஒன்று டைட்டில் பாடல்). பாடல்கள், பிண்ணனி இசை அனைத்திலும் இளையராஜா தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக பாண்டியன் – சீதா காதல் காட்சிகளில் பிண்ணனி இசை அருமையாக இருக்கும். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் நன்றாக இருக்கும், ஒளிப்பதிவாளர்: அசோக் குமார். பாண்டியன் – சீதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில ‘திற்பரப்பு’ அருவியின் மேல்பகுதியில் படமாக்கியிருப்பார்கள்.(காலேஜ் டூர் போன போது பாண்டியராஜன் திட்டில் அமர்ந்து சிகரட் பிடிக்கும் இடத்தில், நானும் அமர்ந்து (போட்டோ) பிடித்தேன்).

சீதாவுக்கு இது தான் முதல் படம். முட்டைக் கண்களுடன் பார்க்க லட்சணமாக இருப்பார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து இருப்பார். முதல் படம் போன்று தெரியாது. ரேவதி, மிகவும் அழகாக இருப்பார் இந்தப் படத்தில். ஆண் பாவத்தில் நடிக்கும் போது அவர் பிரபல நடிகை, ஆனாலும் எந்த பந்தாவும் இல்லாமல், வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்து இருப்பார். ஏறக்குறைய அண்டர்ப் ப்ளே தான்.

சின்ன சின்ன காட்சிகளை மட்டுமே பயன்படுத்தி படம் பார்ப்பவர்களுக்கு ஆழமாகக் கதை சொல்லி இருப்பார் பாண்டியராஜன். பாண்டியன் பெண் பார்க்கும் போது, பொண்ணு உயரம் கம்மியாக இருக்கும் என்று சந்தேகிக்கும் இடம் இதற்க்கு உதராணம். மற்றொரு உதாரணம் டிரான்சிஸ்டர் ரிப்பேர் பார்க்கும் இடம். முதல் முறையாக இந்தப் படத்தை பார்க்கும் போது கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். முதல் முறை இந்தப் படம் பார்பவர்களுக்கு இது புரியும். தான் பாக்கியராஜின் சீடர் என்பதை படத்தின் ஆரம்பத்திலயே இரண்டு காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பார் பாண்டியராஜன். படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘கமலம்’ என்னும் பெண் அழகாக இருப்பார். அந்தக் கமலம் சீக்வென்சும், படம் ஆரம்பத்தில் வரும் பால் ஜோக்கும் அக்மார்க் பாக்கியராஜ் காமெடி (சீ…வகையரா).

பாண்டியன் – சீதா டூயட் பாடல் சூப்ப்ப்ப்பர். உரையாடல் போன்று இருக்கும் இந்தப் பாடல். அகில உலகப் பிரபலமான காமடி “முட்டல வாங்க, முட்டல வாங்க, முட்டீருச்சுங்க” இந்தப் படத்தில் தான். பாசமான அண்ணன் தம்பிகளாக பாண்டியன் – பாண்டியராஜன் நடிப்பு, இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதற்க்கு சான்று. அண்ணன் – தம்பி பாசத்தைக் காட்ட ஒரு சண்டைக் காட்சியும் உண்டு. அதே போல் v.k.ராமசாமி – ஜனகராஜ் இருவரும் அண்ணன் தம்பி என்பதும் சொத்து பிரித்து இருப்பதையும் ரொம்ப விலா வரியாகக் காட்டாமல் வசனங்களிலும், இருவரின் நடிப்பிலும் நமக்கு உணர்த்தி இருப்பார் டைரக்டர். சொத்துப் பிரித்தாலும் இருவருக்குள்ளும் அண்ணன் தம்பி பாசம் விட்டுப் போகாமல் இருப்பதையும் வசன அமைப்பிலயே உணர்த்தி இருப்பார் பாண்டியராஜன். கொஞ்சம் உற்றுப் பார்த்தால் (கேட்டால்) இது புரியும்.

இந்தக் காலத்தில் 40 வயதைக் கடந்த நடிகர்கள் ரமேஷ் கண்ணா, நெல்லை சிவா, பாக்கியராஜ் போன்றே தோற்றத்தில் இருக்கும் நடிகர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். பூர்ணம் விஸ்வனாதன் வழக்கம் போல இழுத்து இழ்த்து பேசி கொஞ்சூண்டு ஒவர்-ஆக்டிங்க் செய்து இருப்பார். v.k.ராமசாமியின் பேச்சு அனைவரையும் சிரிக்க வைக்கும். அவரின் டிரேட்மார்க் ‘மூதேவி’ யும் இந்தப் படத்தில் உண்டு. குபீர் சிரிப்பை வரவழைக்கும் இடங்கள் நிறைய உண்டு இத்திரைப்படத்தில். இந்தப் படத்தில் இன்னொறு பிளஸ் யாரும் நடித்திருக்க மாட்டார்கள்.

ஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி, மீசை முருகேஷ், அவரின் மனைவியாக நடித்தவர், தவக்களை அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்து இருப்பார்கள்.

ஒலகப் படம் பார்ப்பவர்கள் இந்தப் படதையும் சிறந்த உலகப் பட வரிசையில் தாரளமாக சேர்த்துக் கொள்ளளாம். தமிழிலேயே சிறந்த உலகத் தரம் வாய்ந்த படங்கள் இருக்கின்றன.

ஆண் பாவம் : ஒரு பீல் குட் படம்.

கொசுறு::

1. இந்தப் படத்தை ரீமேக் செய்தால் என்னுடைய சாய்ஸ் நடிகர்கள்: சூர்யா (பாண்டியன்), தனுஷ் (பாண்டியராஜன்). ஆனாலும் ஒரிஜினல் படத்தைப் போன்று வருமா என்பது சந்தேகம் தான்.

2. சமீபத்தில் தான் ஆண் பாவம் வெளிவந்து 25 வருடம் ஆனதைக் கொண்டாடினார்கள் (திசம்பர் – 2010 என்று நினைக்கிறேன்).

நண்பேன்டா – 2 …

நண்பேன்டா சீரிஸ்ல ரொம்ப நாளா  பதியணும்னு நெனச்சேன், இப்போ தான் பதிய முடிந்தது…. (நண்பேன்டா – 1 படிக்க)

சென்னையில் 6 ஆம் வகுப்பில் நான் புதிய மாணவன் என்பதால், எனக்கு நண்பர்களே கிடையாது அல்லது யாரிடமும் பேச மாட்டேன். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், இருந்தும் வகுப்பறைகள் மட்டமாக இருக்காது. வகுப்பறைக்குள் சாப்பாட்டுக் கூடைகளை வைக்கும் இடம் எங்களுக்கு எதிரில் ப்ளாக் போர்டுக்குப் பக்கத்தில் இருக்கும். சிமன்ட்டினால் சுவற்றில் செய்யப்பட்ட ஒரு அலமாரி அது. 11.00 மணி இன்டர்வல் அல்லது பிரேக் விடும் போது மாணவச் செல்வங்கள் அனைவரும் எழுந்து போய் எங்கள் முன்னால் சிமன்ட்டில் செய்த அலமாரியில் வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிப்போம். தண்ணீர் குடித்து விட்டு சிலர் எதாவது பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். சிலர் தண்ணீர் இறக்கி விட்டு வருவார்கள் (urinal). 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வைத்திருக்கும் பணக்காரர்கள் காண்டீனில் வாங்கித் தின்பார்கள் பெரும்பாலும் சமோசா தான்.

நான் யாரிடமும் பேசாத காரணத்தால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் பெரும்பாலும் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்வேன். யாரிடமும் தண்ணீர் கேட்கவும் மாட்டேன். யாரும் என்னிடம் கேட்கவும் மாட்டார்கள்.

அந்த காலத்தில் (1994), எவர் சில்வரினால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் பிரபலம். அனைத்து பள்ளிச்சிறுவர்களும் அதை தான் பயன்படுத்துவார்கள். நானும் அதற்க்கு விதிவிலக்கு இல்லாததால் அதை தான் பயன்படுத்தினேன்.

நல்லதொரு செப்டம்பர் மாதத்தில் (என்று நினைக்கிறேன்) தண்ணீர் பாட்டில் அடியில் ஓட்டையானதால், கொண்டு போன தண்ணீர் அனைத்தும் வீணாக ஆனது. இது தெரியாமல் 11.00 மணி பிரேக்கில் நான் தண்ணீர் குடிக்க சென்ற போது, காலியாக இருந்த பாட்டிலை பார்த்து அதிர்ச்சி ஆனேன். அந்த வயசுல இந்த மாதிரி மாட்டருக்கு தானங்க அதிர்ச்சி ஆவோம். பக்கத்தில் நின்றிருந்தவனிடம் தண்ணீர் கேட்க்க, அவன் கர்நாடகா, கேரளா மாதிரி “எனக்கே கொஞ்சம் தான்டா இருக்கு” னு சொல்ல, அவனுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பையன் “இந்தாடா குடி” என்று அவனுடைய தண்ணீர் பாட்டிலை நீட்டினான். நானும் வாங்கிக் குடித்து விட்டு பெஞ்சுக்கு போய் உட்க்கார்ந்தேன். குடிக்க தண்ணி குடுத்த பையன் கிட்ட கூட பேச மாட்டேன்க நானு (சைக்கோப் பைய, சைக்கோப் பைய…)

அவ்வளவு தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம். அது தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகமாக இருக்கும் என்பது கூட எனக்கு புரியவில்லை அப்போது. ஒரு நாள் அவனுடைய அண்ணன் (அவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தார்), தங்கள் தந்தை இறந்து விட்டார் என்று சொல்லி அவனை எங்கள் வகுப்பில் கொண்டு வந்து விட்டார். நீண்ட விடுப்பில் இருந்து அப்போது தான் மறுபடியும் வகுப்புகளுக்கு திரும்பினான். அந்த சமயத்தில் கூட அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை எனக்கு. பின்பு அரையாண்டுத் தேர்வுகள் வந்தது. அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும் சமயங்களில் மழைக் காலமாக இருக்கும். மழை பெய்தால், பள்ளி மைதானத்தில் அங்கங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால் செம்மண் கொண்டு வந்து தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் இட்டு நிரப்புவார்கள்.

ஏதோ ஒரு பாடப் பரீட்சை முடிந்து முதல் மாடிப் படிக்கட்டுகளில் நான் கீழிறங்கி வரும் போது, அந்தப் பையனும் என்னுடன் சேர்ந்து கொண்டான். கீழே இறங்கி வரும் போது, அவன் என்னிடம் “டே  கிரவுண்டுல இருக்கற மண்ணெல்லாம் எங்க இருந்து கொண்டு வந்திருக்காங்கன்னு தெரியுமா” னு கேட்டான். நான் “தெரியாது டா” னு சொன்னேன். அவன் “இந்த மண்ணெல்லாம் நம்ம ப்ரின்சிப்பால் மண்டேல இருந்து கொண்டு வந்தது டா” னு சொல்ல நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த வயதில் இதெல்லாம் மிகப் பெரிய ஜோக்காச்சே. அது தான் எனக்கும் அவனுக்குமான உண்மையான அறிமுகம். ஒவ்வொரு  பரீட்சை முடிந்தவுடன் என்னுடனே என் வீடு வரை வருவான், “வீட்டுக்குள்ள வாடா”ன்னு  கூட அழைக்க மாட்டேன். நான் வீட்டிற்குள் சென்ற பின், அவன் வீட்டிற்கு கிளம்பிச் செல்வான். அந்த சமயங்களில் என்னுடைய வீட்டிற்குள் அவனை அழைத்துச் செல்வதற்கு கூட பயமாக இருக்கும், ஏன் பயந்தேன் (படிக்க கொசுறு ‘2’).

அவன் வீடு எங்கள் பள்ளிக்கு பின்புறம் இருந்தது. என்னை வீட்டில் விட்டு விட்டு, எங்கள் பள்ளியை தாண்டி அவன் வீட்டிற்க்கு செல்வான் (நடந்து தான்).

இவ்வாறாக எங்கள் நட்பு, பள்ளியில் கண்ணா மூச்சி, கிரிகெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, பின்பு எல்லா நண்பர்களும் செய்யும் அனைத்து தப்பையும் தவறாமல் செய்து வளர்ந்தது. சென்னையில் எனக்கான இன்னொரு அற்ப்புதமான அறிமுகம் இவன் தான். இன்றும் என்னுடைய உற்ற நண்பனாக அடிக்கடி சண்டைகளுடனும், நிறைய பேச்சுகளுடனும் எங்கள் நட்பு தொடர்கிறது. காலஓட்டம், காலப்போக்கு, வைத்துப்போக்கு அனைத்திலும் எங்கள் நட்பு தொடரும் என்று நினைக்கிறேன்.

கொசுறு::

1. அவன் பெயர் சீனிவாசன். MBA (Tourism and Hotel Management) முடித்து விட்டு, தனக்கான சரியான களம் எது என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கின்றான் …

2. ஏன் பயந்தேன் என்பதை ஆராய வேண்டாம்… free yah உடுங்க …

3. இது சீனிவாசனுக்கு … இந்தப் பதிவை படித்து விட்டு, எனக்கு போன் செய்து நெஞ்சை நக்கினால், ____________________ (fill in the blanks with பேடு words) …